Friday, April 17, 2009

அகம் அறிந்த முகங்கள்......

தொழில்நுட்ப முன்னேற்றம்..
தொலைத்தொடர்பு பரிமாற்றம்...
பார்ப்பவரிடமெல்லாம் கைபேசி...
செல்லுமிடமெல்லாம் செல்பேசி..

அக்கம்பக்க இருக்கைகளில்
அருகமர்ந்து பயணிக்கையில்,
அன்புப் பார்வையில் துவங்கி
அரட்டைக் கச்சேரிகள் - அன்று!

அவரவர் "பேசிகளில்"
அவரவர் பேச்சுச் சத்தம்;
அடுத்திருப்பது ஒரு ஜடமோ என
அவரவர் கூடுகளின் கவசம் - இன்று!!

எண்ணற்ற இணைய தோழமைகள் -
வார்த்தைப் பரிமாறல் தொடங்கி
வாக்கியப் பரிமாறல்...
உணர்ச்சிப் பரிமாறல் என..
கண்டிப்பாய் தினந்தோறும்
கடமையாய் நிறைவேறும்

ஆனாலும்....

ஆசையோடு செய்துவைத்த
உணவு பற்றி மனைவி...
தன் ஓவியக் கிறுக்கல்களின்
பெருமிதம் பற்றி மழலை...
உளமார உன் அரைமணி
உரையாடலுக்காய் பெற்றோர்..
தொலைபேசி விசாரிப்பில்
தொடரும் நட்பும், சுற்றமும்...


வலைத் தளமா? சிலந்தி
வலைத் தளமா?

முகமறியா தோழமைக்காய்
முத்தெடுக்க நீ குதித்தாய்..
மூழ்கியதை மறந்து விட்டாய்!
கரையினையும் துறந்துவிட்டாய்!

உன் அகம் அறிந்த முகங்களின்
ஆதங்கக் கவிதை இது!
சிந்தித்துப் பாருங்கள்!
சொன்ன சேதி புலனாகும்!

No comments: