Wednesday, April 29, 2009

?????????????????

யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?

நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?

Tuesday, April 28, 2009

போரின் முடிவென்பது , இனத்தின் முடிவல்ல ......

சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத்தாருங்கள்

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிம் சிறூவர்க்குக்
கை கொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுதுதொலைக்கும் பிள்ளைகளின்
அவலக்குரல் போக்குங்கள்!


எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல

ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக்
குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மை மீதுதான்

குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்டமுடியாதா?

போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை

அழிந்தது போலிருக்கு அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்

வைரமுத்து

Friday, April 24, 2009

எப்படியாவது சொல்லிவிடுங்கள்

எப்படியாவது சொல்லிவிடுங்கள்!
விலங்குகளினும் கீழாய்
வயது வேறுபாடின்றி
வேட்டையாடப்படும் ஈழத்தமிழனிடம் - அவன்
இறப்பதற்கான காரணம்
என்னவென்று!
கடைசி
ஆசையைக் கேட்டால்
எனது முதலாவது ஆசையே
சுதந்திரம்தான் என்று
முரண்டு பிடிப்பான் எனவே
அவன் இறப்பதற்கான காரணத்தை
மட்டுமாவது சொல்லிவிடுங்கள்!

சிங்களனின் காமத்திற்கும்
காட்சிப்பொருளுக்குமாய்
ஆடையின்றி அம்மணமாய்
புத்தி பேதலித்து படுத்திருக்கும்
அவளை எழுப்பி சொல்லி விடுங்கள் !
இலங்கை இறையாண்மையுள்ள நாடு -அதன்
உள் விவகாரங்களில் உலகம்
தலையிட முடியாது என்று!

பசியின் கொடுமையால்
விஷச்செடிக்கும் மற்றதுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
தின்று மயங்கி கிடப்பவனிடம்
இறப்பதற்கு முன் எப்படியாவது
சொல்லிவிடுங்கள் !
சந்தைப்பிடிக்கும் முதலாளித்துவ
வல்லாதிக்க சக்திகளின்
சதிவலையை அறுக்க
தெரிந்திருந்தால்
இப்படி நடந்திருக்காதென்று!

குத்தாட்ட நடிகையிடமும்
கொள்கைப் பேசி
குடும்பம் வளர்க்கும் தலைவனிடமும்
அரசியலை நாங்கள்
அடகு வைக்காமல் இருந்திருந்தால்
மொத்தத்தையும் இழந்துவிட்டு
நிர்கதியாய் நிற்கும் உனக்கு
எப்படியும் தமிழகம்
ஏதாவது செய்திருக்குமென்று!

கணவன் குழந்தையென
இறப்போர் இறக்க - இருப்போரும்
எப்போது மரிப்போமென
சித்தம்கலங்கி திரியும் உனக்கு
கணவனின் கொலைக்காய்
எங்கள் இனத்தையே
கருவறுக்க உறுதிப்பூண்டு
எங்களின் அத்தனைப்
போராட்டங்களையும் அலட்சிமாய்
புறந்தள்ளும் அன்னையின்
அதிகாரத்தை கேள்விகேட்கும்
வழி தெரிந்திருந்தால் - எப்படியும்
நியாயம் கிடைத்திருக்குமென்று!

அடிப்படை கல்வியே மறுக்கப்பட்டு
ஆயுதம் தூக்கிய உன்னால்
தீவிரவாதத்திற்கும்
தேசிய விடுதலைப்போருக்குமான
வேறுபாட்டை -உலகுக்கு
புரியும் மொழியில்
சொல்லத்தெரிந்த்திருந்தால்
அதன் கொள்கைகளை மாற்றும்
சக்தி இருந்தால்
எப்படியும் தடுத்து விடலாம் என்று!

இருந்தால் அடிமை ஆவாய்
இறந்தால் புலி ஆவாய் - என
ஓடிக்கொண்டிருக்கும் உனது வாழ்கையை
தீக்குளிப்பு போராட்டங்கள் கூட
சடங்காகிப் போன தேசத்தில்
அண்டை மாநிலங்களுக்கும் அரசுக்கும்
புரிகின்ற மொழியில் -எங்களுக்குப்
போராடத் தெரிந்திருந்தால்
எப்படியும் மாற்றிவிடலாம் என்று!

உலகத்தின் அத்தனை
அதிகார மையங்களின்
மொத்தத்தவறுகளும் மூர்க்கமாய் தாக்க
செத்தாலும் சாவேன்
அடிபணிய மாட்டேன்- என
ஒற்றையாய் எதிர்த்து நிற்கிறாயே
உனது சுதந்திரத்திற்காய் !
அதனால்தான் -இந்த உலகம
உன்னை தீராப்பகையுடன்
வன்னி காடுகளில்
வேட்டைநாயாய் தேடி
அலைகிறதென்று !
எப்படியாவது சொல்லிவிடுங்கள்!

Friday, April 17, 2009

புத்தாண்டு

தீமைகளைத் தடுக்க
முடியாதபோது..
உண்மைகளைச் சொல்ல
இயலாதபோது..
அநீதிகளைக் காணும்போது..
சக மனிதர்
இழிவுபடுத்தப்படும்போது..
இயற்கை
மாசுபடுத்தப்படும்போது..
எதுவுமே
அரசியலாக்கப்படும்போது..
அடிப்படை வசதிகள்கூட
கனவாகும்போது..
பிஞ்சுகள் மரணம் கேட்டால்..
பள்ளிச் சிறுமிகள் கூட
தற்கொலைக்குத் தயாராகும்போது..

சகிக்க முடியாத ஒவ்வொரு
செய்திக்கும்
மனசு
பொங்குகிறது.

இறைவா..

எங்கள் சகோதரர் வீடுகளில்
என்றென்றும்
பால் மட்டும் பொங்க..
பரவசம் பொங்க..
அன்பு பொங்க..
இந்த புத்தாண்டு மலரட்டும்..

எண்ணிக்கையால் சாமர்த்தியப்படுத்துதல்

உங்களால் முடியும் - ஒரு
உரிமை போராட்டத்தை
ஆயுதப் போராட்டமாக்கலாம்
ஆயுதப் போராட்டத்தை,
தீவிரவாதமாக்கலாம்;
உங்களால் முடியும்.

இப்பொழுது நீங்கள்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
தீவிரவாதத்திற்கு எதிராய்

ஏதோ ஒரு பெயரிட்ட
தேசப்பாதுகாப்பு சட்டத்தின் மூலம்
விசாரணையின்றி கைதியாக்கலாம்.

சுயமரியாதை தேடி
போராளியானவன் இப்பொழுது
உங்கள் வசம் - நீங்கள்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்;

உங்களுக்குத்
தெரிந்த, தெரியாத, கற்பனையான
எத்தகைய குரூரத்தையும்
நீங்கள் அவனிடம்
அல்லது அவளிடம் பயன்படுத்தலாம்;
சத்தியமாய் நீங்கள்
சட்டப்படிதான் நடந்துகொண்டிருக்கிறீர்கள்;

சிக்கியவன்
ஆணோ, பெண்ணோ
அவர்களது தற்கொலைக்குக் கூட
அவர்களை தகுதியற்றவர் ஆக்கலாம்;

உங்களது ஆழ்மனக் குரூரங்களுக்கு
தொடர்ந்து ஆள்கிடைப்பார்கள்,
நீங்கள் அரசியல்வாதியாகவோ,
அரசியலால் அடையாளப்படுத்தப்பட்ட
ஆயுததாரியாகவோ இருக்கலாம்,
கவலைப்படாதீர்கள் - நீங்கள்
சட்டத்தின் காவலர்கள்.

மெத்தப்பெருமை எனனவெனில் -நீங்கள்
பேரினவாதத்தின் அடையாளமாய்
இருக்க வேண்டும்;
இப்பொழுது நீங்கள்
யாரையும் கைதியாக்கலாம்
குற்றவாளியாக்கலாம்,
வன்புணர்ச்சி கொள்ளலாம்,
வகை வகையாய்
சித்திரவதை செய்யலாம்; - ஆனால்
அவனை, அவளை
அவர்களை தீவிரவாதிகளென்று
அடையாளப்படுத்துதல் மிகமுக்கியம்.

சுயஉரிமை கேட்டுப்போராடியவனின்
வாழ்வும், தியாகமும்
எதிர்காலமும்
உங்கள் கையில்
நீங்கள் வேண்டியபடி
விளையாடலாம்,
வேண்டாமெனில் அழிக்கலாம்.

நீங்கள் சின்னதாய்
தொடங்கிய குரூர விளையாட்டுக்கு
தொடர்ந்து ஆள் கிடைப்பார்கள்
பயப்படாதீர்கள் ஆதரவும் கிடைக்கும்;
நீங்கள் செய்ய வேண்டியது
உங்கள் பேரினவாதத்திறகு
ஜனநாயகம் என்று பெயரிடுவதுதான்.

இப்பொழுது நீங்கள்
உங்கள் அத்தனை தவறுகளிலிருந்தும்
புனிதமாக்கப்படுவீர்கள்;
இப்பொழுது அண்டை வீட்டிலிருந்து
உலக நாடுகள் வரை
உங்களுக்கு,
உங்கள் ஜனநாயகத்திற்கு
ஆதரவு வழங்கும்;

இப்பொழுது உரிமைகள்
கேட்டவர்கள் தீவிரவாதிகள்
எண்ணிக்கை பற்றி கவலையில்லை,
அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் -அல்லது
வழிக்கு கொண்டுவரப்பட வேண்டியவர்கள்.

கருவின் சிசுவிலிருந்தே
கணக்கை துவக்க வேண்டும்.

கருக்கலைப்பு,
துப்பாகிக்குண்டுகள்,
அட்டிலெரிகள்,
பல்குழல் பீரங்கி,
விமானம்,கடற்படை -என
எவ்விதம் வேண்டுமானாலும் தாக்கலாம்

யோசியுங்கள் இன்னும்
என்னென்ன செய்யலாம் என்று ;
முடியவில்லை எனில்,
உங்களைப் போலவே
அடையாளப்படுத்தப்பட்ட ஜனநாயகம்தான்
அண்டை நாடுகளில்...
கேளுங்கள் !
ஆயுதங்களாய், அறிவுரைகளாய்
நிதி உதவியாய், நிவாரணப்பொருட்களாய்...
முடித்தவரை தருவார்கள்;

உணவு, உடை, மருந்து
என எதையும்
ஆயுதம் ஆக்கலாம்
அவசியம் அவற்றை
அறிக்கைகளால் நியாயப்படுத்திவிடுங்கள்!

நீங்கள் கொன்று தீர்த்தவர்களில்
எஞ்சியவரை சிறை பிடியுங்கள்;
சீர்திருத்தம், மறுவாழ்வு,
நலன் வாழ்வு என ஏதாவது
பெயரில் சித்திரவதை செய்யலாம்.

அவர்களை அடிமைகளாய்
கைதிகளாய் அப்படியே
வைத்திருங்கள் - உங்கள்
சந்ததியினருக்கு காட்டலாம்,
எஞ்சிய குரூரங்களுக்கும்
தீனியாக்கலாம்.

இத்தனைக்கும் முக்கியம்
உங்கள் பேரினவாதத்தை
ஜனநாயகம் என்று
எண்ணிக்கையால்
சாமர்த்தியப்படுத்துதல்!

துன்பங்களும் துயரங்களும் ..

விடிகிறது ஒவ்வொரு இரவுகளும் எங்கள் குருதி குடிப்பதற்காகவே. ஆனாலும் எஞ்சியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இன்னும் வலிகளுடன். எங்கள் முற்றங்களில் வெடித்துச் சிதறியிருப்பது குண்டுகளின் எச்சங்கள் மட்டுமல்ல எங்கள் உறவுகளின் உடல்களும் தான்.
ஓடிஓடி ஓய்ந்து போன கால்களுடன் பிணங்களைப் பார்த்துப் பார்;த்து மரத்துப் போனது மனதும் தான். அழுவதற்காகத் தவிர எங்கள் வாய்கள் திறக்கப்படவேண்டிய அவசியமே கிடையாது. வாழ்வதற்கு வீடில்லை. உண்ண உணவில்லை. போய்க்கொண்டிருக்கும் உயிர்களை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எதுவுமே செய்ய முடியாத சடங்களாகிப் போனோம். துன்பங்களும் துயரங்களும் எங்களுக்கொன்றும் புதிதில்லைத் தானே. விரக்தியின் விளிம்பில் நின்று வேடிக்கை பார்க்கின்றோம் அடுத்து வருவது எமக்கான குண்டாய் இருக்கலாம் என்று. நாங்களும் கூட நாள் நேரம் குறிக்கப்பட்ட தற்கொலைப் படையாளிகள் போலத்தான் சிதறிப் போகின்றோம் முகங்களும் முகவரிகளுமின்றி.

கொடுமையென்னவெனில் முதல் குண்டில் உயிர் போகும் உடலங்கள் சிதைமூட்டவோ குழிதோண்டவோ அவசியமின்றி சிதறிப் போகின்றன. அடுத்த குண்டிலேயே சொந்த மண்ணில் வாழ விரும்பிய பாவத்திற்கு புதைக்கக் கூட தேவையின்றி கருகிப் போகின்றோம்.

ஈழமே எரிகின்ற நடுராத்திரியில் போர் விமானங்கள் வீசிக் கொண்டிருக்கும் பேரொளிமிக்க ராக்கெட்டுக்களின் ஒளியில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். எனக்காகவல்ல. என் இனத்தின் நிலையை நீங்களும் அறியவேண்டும் என்பதற்காக. உணவின்றி உறவுகளின்றி, உணர்வுகள் செத்தநிலையில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? எம் உறவுகள் கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பமாக கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டு சடமாக வாழ்வதைவிட சாவது மேல் தானில்லையா?

நீங்கள் கேட்பது புரிகிறது. நீங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் தானே? அது தானே? பாதுகாப்பான பகுதி என இலங்கையரசு குறிப்பிடும் அந்த வதை முகாம்களையா சொல்கிறீர்கள்? அந்த மக்கள் வாழ்வது முகாம்களாகவா உங்களுக்குத் தெரிகிறது? சிறைகளுக்குக் கூட சுவர்கள் தானே இருக்கும்;. இங்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட முட்கம்பி வேலிகளல்லவா இருக்கிறது? அதுமட்டுமா? குருதியெடுக்கிறார்கள் அனுமதியின்றி, கருக்கலைப்புச் செய்கிறார்கள், அகவையடிப்படையில் பிரிக்கப்பட்டு விசாரணையென்ற பெயரில் அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்களின் கற்பு பறிக்கப்படுகிறது.

ஆண்கள் சித்திரவதைப்படுத்தப்பட்டு முகவரியிழந்து போகிறார்கள். உறவுகளுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை. அவர்கள உலகமே முட்கம்பி வேலிகளுக்குள் தானே. இதை உங்களால் நம்பமுடியுமோ இல்லையோ இது தான் உண்மை. எங்களால் நம்ப முடியும. ஏனெனில் இதை விட குருரங்களைச் சந்தித்தவர்கள் நாங்கள். அங்கு இவை மட்டும் தான் நடக்கிறதா எனச் சந்தேகம் கொள்ள வைக்கின்றன அண்மைச் செய்திகள்.

இது பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தடை செய்யப்படுகின்றார்கள் என்பது நிஐம் தானே. இதற்கு என்ன அர்த்தம் புரியவில்லையா? சிங்கள அரக்கர்களிடம் சிக்கி சின்னாபின்னமாவதை விட சிதறிப்போவது மேல் எம்மண்ணிலேயே.எம் மண்ணில் மண்ணோடு மண்ணாக சிதறிப் போயிருப்பது உறவுகளின் உடல்கள் மட்டும் தான். அவர்களின் உயிர்கள் அலைந்துகொண்டு தானிருக்கும் உறவுகளைத் தேடி...நீங்கள் இதுவரையறிந்;திருக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை சிறியதாகத் தானிருக்கும்;. ஏனெனில் சிதறிப்போனவர்களைத் தேடி உறவுகள் இன்னும்; அலைந்துகொண்டு தானிருக்கிறார்கள. எஞ்சியிருக்கும் இரண்டரை இலட்சம் மக்களின் தொகையும் நாளாந்தம் குறைந்துகொண்டுதானிருக்கின்றது.

எம் மண்ணில் நடப்பது பயங்கரவாதத்திற்கெதிரான போரென்று தான் உலகமும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. யாரை பயங்கரவாதி என்கிறார்கள் இவர்களையா? சாகும் எம் சந்ததியைக் காப்பாற்ற முடியாத உலகம் தரும் உணவுப் பொருட்களும் மருந்தும் விசமாகத் தான் தெரிகின்றது எங்களுக்கு. ஒட்டு மொத்த உலகமும் அளித்த பரிசல்லவா இந்த வாழ்வு. உலகமே உனக்கு ஒன்றைச் சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

பேச்சுவார்த்தை, விசாரணை, ஆய்வு என நீ போட்டிருக்கும் முகமூடிகளுக்கு அவசியமேயில்லை. நொடிப்பொழுதில் நூறு உயிர் போகும் எம் மண்ணிற்காக நீங்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் போது செழிப்பான எங்கள் பூமி சிவந்திருக்கும் எஞ்சியவர்களின் குருதியால். அதிகார பலமிழந்து வாழும் தாய் தமிழ் உறவுகளே உங்கள் கண்ணீரும் கனத்த குரல்களும் உண்ணாவிரதங்களும் உயிர்த்தியாகங்களும் கண்டு மனங்கலங்கிப் போகின்றோம். ஆனால் பயனில்லை இதுவரை.

அதிகாரத்தின் கதவுகளைத் தட்டவில்லை உங்கள் ஈகங்கள். ஓர் அரசிடம், அதிகாரத்திலிருப்பவரிடம் கேட்க முடியாததை அல்லது கேட்டுக் கேட்டுப் பயனற்றுப் போனதை உறவுகளே உங்களிடம் கேட்கின்றோம். எங்கள் அவலங்களை அம்பலமாக்குங்கள். உயிரிழந்து உருக்குலைந்:து போகும் உங்கள் உறவுகளின் உண்மைநிலையை உலகத்திற்கு வெளிப்படுத்துங்கள். எங்கள் உணர்வுகளை உங்கள் குரலாக வெளிக்கொண்டு வாருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக, விரைவாக எங்களுக்காகச் செயற்படுங்கள். என் உயிர்கூட இதைச் சொல்லுவதற்காகத் தான் எஞ்சியிருந்ததோ என்னவோ? விடைபெறுகின்றேன் இது கூட என் இறுதி வேண்டுகோளாக இருக்கலாம் என் எண்ணத்தில்..

நன்றி

குருதி வடியும் தேசத்திலிருந்து
உங்கள் உறவு

அகம் அறிந்த முகங்கள்......

தொழில்நுட்ப முன்னேற்றம்..
தொலைத்தொடர்பு பரிமாற்றம்...
பார்ப்பவரிடமெல்லாம் கைபேசி...
செல்லுமிடமெல்லாம் செல்பேசி..

அக்கம்பக்க இருக்கைகளில்
அருகமர்ந்து பயணிக்கையில்,
அன்புப் பார்வையில் துவங்கி
அரட்டைக் கச்சேரிகள் - அன்று!

அவரவர் "பேசிகளில்"
அவரவர் பேச்சுச் சத்தம்;
அடுத்திருப்பது ஒரு ஜடமோ என
அவரவர் கூடுகளின் கவசம் - இன்று!!

எண்ணற்ற இணைய தோழமைகள் -
வார்த்தைப் பரிமாறல் தொடங்கி
வாக்கியப் பரிமாறல்...
உணர்ச்சிப் பரிமாறல் என..
கண்டிப்பாய் தினந்தோறும்
கடமையாய் நிறைவேறும்

ஆனாலும்....

ஆசையோடு செய்துவைத்த
உணவு பற்றி மனைவி...
தன் ஓவியக் கிறுக்கல்களின்
பெருமிதம் பற்றி மழலை...
உளமார உன் அரைமணி
உரையாடலுக்காய் பெற்றோர்..
தொலைபேசி விசாரிப்பில்
தொடரும் நட்பும், சுற்றமும்...


வலைத் தளமா? சிலந்தி
வலைத் தளமா?

முகமறியா தோழமைக்காய்
முத்தெடுக்க நீ குதித்தாய்..
மூழ்கியதை மறந்து விட்டாய்!
கரையினையும் துறந்துவிட்டாய்!

உன் அகம் அறிந்த முகங்களின்
ஆதங்கக் கவிதை இது!
சிந்தித்துப் பாருங்கள்!
சொன்ன சேதி புலனாகும்!

முடியவில்லை.

அப்பாவிச் சனங்களின் பிணங்களின் மீது
எழுதப்படுகின்ற வெற்றிச் செய்திகள்
வெடி கொளுத்தி மகிழ்தல்களுக்கு
அப்பாலும் நீண்டு செல்கிறது
கொடிய போர்...

தொலைந்த என் முகவரி

எனது தெருவிலேயே
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது முகவரியை...

எப்படித் தொலைத்திருப்பேன்?
தூக்கத்தில்..
தனிமையில்..
காதலில்..
நினைவில் இல்லை

யாரேனும் களவாடியிருக்கவும் கூடும்

போகப்போக புரிந்து கொண்டேன்
முகவரியை மட்டுமல்ல
முகத்தைக்கூட நான் தொலைத்திருக்கிறேன்.

எல்லோரிடமும் விசாரித்துப் பார்க்க
எத்தனித்தபோது அதிர்ந்து போனேன்..

என்போலவே எல்லோரும்
அவரவர் தெருக்களில்
அவரவர் முகவரியையும் முகத்தையும்
தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்..

இப்போது புரிகிறது
மனிதநேயத்தின் முகவரியை மனிதன்
சுட்டெரித்த தினத்தன்றுதான்
காணாமல் போயிருக்கும்
மனிதம் என்னும் முகவரி...

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! "விகடன்"

பதுங்கு குழியில் வாழ்க்கை கழியும்
உங்கள் உடலை சொந்தம் தேடும்
இய்ந்திரப்பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் எமனாவான்
உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்
பல முறை தீப்பிடிக்கும்
பார்த்துக்கொண்டே இருப்பீர்களா?
ஓரணியில் திரண்டு
ஒரே முடிவு எட்ப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களை தோற்கடிக்காதீர்கள்
இந்த தாகம் இந்த சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேரிழப்பு
எல்லாம் தமிழனுக்கு
வாய்த்த தலைவிதியா
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மர நிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களை வன்புணர்ந்து
பேய்கள் வெறி தீர்க்கும்
இரத்த ஆறு வழிந்தோடும்
நடுவில் நாய் நக்கும்
தலையில் செல் வந்து விழும்
வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத் தழிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உண்ர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயை பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடுவிட்டு நாடு போய்
நரகத்தில் தொலைய முடியுமா?
ஈழத் தழிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளூம் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைதுக் கட்சிகள்
௯ட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமே திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினுள்
எரிமலை எழுந்தாலும்
தனித்தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சினில் சுமக்கின்றோம்
தணியாத தாகமாய் விடுதலை கேட்க்கின்றோம்
ஈழத் தழிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

என்னைக் கவர்ந்த --------- ஒன்று

மாங்கிளியும் மரம்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்ல
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல

சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளி சொரியுது
எங்கள் உயிர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது

தாய் கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளை கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம் பிஞ்சுகளை அழிக்கிறான்

பெத்தவங்க ஊரிலே ஏங்குறாங்க பாசத்தில
எத்தனை நாள் காத்திருப்போம் அடுத்தவன் தேசத்தில

உண்ணவும் முடியுதில்ல உறங்கவும் முடியுதில்ல
எண்ணவும் முடியுதில்ல இன்னும்தான் விடியுதில்ல

கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல