Monday, November 24, 2008

இன்று ஒரு கடிதம்.....



இன்று ஒரு கடிதம்..... நினைவுகளால், துடிப்புக்களால், உணர்வுகளால், வலிகளால் மனது கனத்திருக்க, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.

காகிதத்தில் கண்ணீர் துளி விழ, காட்சிகள் கண் முன்னோட, பேனாவை விரல்கள் அழுத்தும் விசை குறைய, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.

எத்தனையோ கண்டுவிட்டேன் அச்சின்னஞ்சிறு வயதிலேயே. எனை சுற்றி வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்து போவதையும், மறைந்தவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதையும், கண்டுவிட்டேன்.

எத்தனையோ கண்டுவிட்டேன்....

பக்கத்து வீட்டு பாப்பா, எதிர் வீட்டு பாட்டி, அண்டைவீட்டு அங்கிள், அதற்கடுத்த வீட்டு அண்ணா, ஏன் எனது அக்கா இப்படி எத்தனை பேர் போயிருப்பார் போரினாலே.

அங்காங்கே குண்டுவிழுந்து நிலத்தில் குழிவிழுந்த காட்சிகளும். ஆமி வந்தால் அடிக்க வயலினூடே வரிசையாய் பொடி நடையாய் புலியாய் புழுதி கிளப்பி போகும் அண்ணாமாரும் அக்காமாறும், அவர்களை பார்த்து கண்ணீர் விடும் எண்ணில்லா மனங்களும், காட்சிகளாய் என் முன்னே வந்து நிற்க.... ஒரு கடிதம் எழுதுகிறேன்.

பாடசாலையிலே சின்னஞ்சிறுவர் நாம் சொந்த உழைப்பினிலே பங்கர் கிண்டியதும், ஓடியாடி விளையாடியதையும் விட சுப்பர்சோனிக்குக்கு பயந்தோடி பங்கருக்குள் பதுங்கியது, பங்கருக்குள் இருந்த பாம்பு கடித்து நன்பன் இறந்ததுவும் நினைவுகளாய் அலைமோத... இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.

எழுத்துக்கள் முற்றுப் புள்ளியுடன் மோதியும், ஆச்சரிய குறியிடம் அடிபட்டும், கேள்விக்குறியிடம் சிக்குண்டும், எதுகை மோனை போல் சலசலத்தும் வரைகிறது காகித்தில்... "வேண்டாம்" என்று.

நவாலி வெளியிலே அடுக்கடுக்காய் அந்த சகடை போட்ட எட்டும் காற்றில் பறந்து வந்த காட்சிகளும், நெஞ்சுநோவு என்று வழியிலேயே குந்தி இருந்து எம்மை தேவாலத்தை அடையவிடாத காப்பாற்றிய அந்த பெருசும் காட்சிகளாய் வர.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.

அப்பாவும் ,அம்மாவும், அக்காவும் , அண்ணாவும், சுற்றமும் அகதியாய் அன்று ஓடியதன் கால் வலி இன்று உணர்ந்திட.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.

நெட்டைக்கால் தாத்தாவுக்கு கட்டைக்கால் பொருத்தியதும், கம்பீரமாய் நின்றவர் கூனிகுறுகியதும் நினைவுகளாய் மனதில் விழ... எழுதுகிறேன் ஒரு கடிதம்.

வேந்தன் மாமா வேங்கையாய் ஆகியதும் வெம்பி வெம்பி நாம் அழுததுவும்
பயந்தொடிய அக்காலங்களும் போராட சென்றவர்கட்டு சுட்டனுப்பிய பருத்தித்துறை வடையும் ஞாபகங்களாய் இரைமீட்க... எழுதுகிறேன் ஒரு கடிதம்.

தாத்தா மென்று துப்பிய வெற்றிலை சிவப்பு கறை கண்டு அலரித்துடித்த அப்பத்தா- பிரிதொரு நாளில், அப்பாவியாய் குருதிகளுக்கு நடுவில் உறங்கிய காட்சிகளும் நினைவில் வர.... எழுதுகின்றேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"

அக் கொடுமைகளை நித்தம் நான் கண்டுகொண்டிருந்தால் எனக்கும் ஒருவித வெறி வந்திருக்கும்... ஆனால் பாதியிலே இங்கு வந்ததால் பயம்தான் வந்ததுவோ? தெரியவில்லை..

ஆதலினால் பயத்துடன் எழுதுகிறேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்ற

Friday, November 7, 2008

என் நண்பர்கள்.........

உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் நண்பர்களே.......

Monday, September 15, 2008

இப்படிக்கு,எழுதுகோல்.

கவிதைகளை உடுத்திக் கொண்ட
வார்த்தைகள்
பாடல் ஆனது.

உன் நினைவுகளை
உடுத்திக்கொண்ட
என் மனது காதலானது.

உன்னை
எழுதுவதாலேயே
என் வார்த்தைகள் கவிதையானது.

ஆம்… நீ
நடந்து வரும் கவிதையல்லவா!!!

எனக்கு ஒரு சந்தேகம்…

நான் உன்னை
பார்த்த பிறகு வாங்கிய
எல்லா எழுதுகோலும்
உன்னை எழுதியிருக்கிறது.

அது ஏன்?

அது ஏனென்று எனக்கு
இப்போதுதான் புரிந்தது…

நீ
என்னையே
எழுதுகோலாக்கி விட்டிருந்தாய் என்று!

ஏ கவிதையே,
இந்த எழுதுகோல்
உன்னைக் காதலிக்கிறது.

இப்படிக்கு,
எழுதுகோல்.

Wednesday, August 27, 2008

உன் பிரிவினில்

உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை,
உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை,
உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்லை,
ஆனால், உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும்