Sunday, May 31, 2009

ஈழத்து அகதியாய்..

எதுவுமே
தெரியவில்லை நண்பனே

கனவிலும் கேட்க்கும்
உறவுகள் ஓப்பாரி

குருதி அறியா
என் குழந்தைகள்
குருதியாய்
அழுது அழுது
காய்ந்த விழிகள்

குதறிக் கிளிபடும்
என்சகோதரி உடல்கள்

சர்வதேசமே காப்பாற்று
கடைசி நிமிடம்வரை
கதறிய குரல்கள்
நந்திக்கடல் சாட்சியாக
தீயுள் மண்ணுள்
புதைக்கப்பட்டதை
எரிக்கப்பட்டதை

பாராமல் இருந்த
கொடிய மனிதர்களை

முடியவில்லை நண்பனே

ஓடிவிழையாடி
இயற்க்கையைத் தின்று
நேரங்கள் மறந்து
குலாவித்திரிந்ததும்
என் அன்னையின்
உடல் சங்கமமானதும்
வன்னிமண்ணில்

யாரும் நினைத்திரா
பொழுதொன்றில்
அன்னியர் புகுந்து
கால் பதித்ததில்
அமைதி அழிந்து
குருதி ஓடுகிறது

பாடித்திரிந்த பறவைகளும்
கனவுகள் வளர்த்த
இழயவர்களும்
கூச்சல்போட்ட சிறுவர்களும்
குலாவித்திரிந்த பெண்களும்
கூடிப்பேசிய வயதினரும்
காணாமல்போயினர்

அள்ளி அள்ளி
வழங்கிய மக்கள்
கை ஏந்தித்
தவிப்பதை

முடியவில்லை நண்பனே

புதைகுழிகள் இப்போ
நவீனமாகி
தடயங்கள் அழிக்கும்
எரிகூடங்களாகிறது
கருகிய மனிதர்கள்
கடலில் கரைகிறார்

காற்றில் இப்போ
நறுமணம் இல்லை
கடல் இப்போ
நீலமும் இல்லை
வானத்தில் இப்போ
வர்ணங்கள் இல்லை

முடியவில்லை நண்பனே
எதுவும்

இன்று என்னிடம்
எஞ்சியிருப்பது
ஈழத்து அகதியின்
வலிகள் மட்டுமே.

Wednesday, May 27, 2009

அவசர கடிதம்

பிரியமானவர்களே,

நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் புழங்கிக்கொள்ளட்டுமென என் அறையின் சாவியை கதவிடுக்கில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். "இப்படி சாவியை வெளியே வைத்துவிட்டு போகிறீர்களே... ஏதாவது களவு போய்விட்டால் என்ன செய்வீர்கள்?!" என்ற கேள்வியைக் கேட்காத நபரில்லை. "இந்த அறையின் ஓரே உயரிய பொருள் நான்தான். நான் வெளியே இருக்கையில் என்ன கவலை?!" என முல்லா பாணியில் பதில் சொல்வது வாடிக்கை.

நிற்க. இன்று காலை ஆறு மணிக்கும் ஆறு பத்திற்கும் இடையேயான ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது செல்போன் களவாடப்பட்டு விட்டது. குளியலறைக்குள் "வில்லினையொத்த புருவம் வளைத்தனை..."பாடிக்கொண்டிருந்தபோது செல்லினை யாரோ வளைத்துவிட்டார்கள். அவசர தேவைக்கோ, காதலியோடு கதைக்கவோ, மாலை நேரத்துக் குடிக்கோ, பிள்ளையின் படிப்புச் செலவிற்கோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காவோ களவாடப்பட்டிருக்கலாம். காரணத்தோடுதானே எதுவும் காணாமல் போகிறது.

மூளையை எத்தனை கசக்கினாலும் எவரையும் சந்தேகம் கொள்ள இயலவில்லை. விடுதியறையின் இரும்புக்கதவுகள் திறக்கப்படாத அதிகாலையில் வெளியாட்கள் யாரும் உள்ளே வர வாய்ப்பில்லை. இருக்கிற நாற்பது மனிதர்களையும், இருபது அறைகளையும் துளாவும் அளவிற்கா நம்மிடம் நைச்சியம் இருக்கிறது. திருடிய ஒருவருக்காக முப்பத்தொன்பது மனிதர்களை எப்படி அவமானப்படுத்துவது?! வெட்டென மறந்தேன்.

கடவுள் புண்ணியத்தில் காசு இருக்கிறது. ஆனால், ஐந்தரை வருடங்களாய் தேடிச் சேர்த்த எண்கள்?! செல்போனை எடுத்த புண்ணியவான் சிம்கார்டையாவது வீசி விட்டுச் சென்றிருக்கலாம். அத்தனை அறம் இருக்கிறவன் ஏன் திருடுகிறான் என்கிறீர்களா?! அதுவும் சரிதான்.

ஆனது ஆகிவிட்டது. உங்களது எண்களைத் தெரியப்படுத்துங்கள். அடுத்த மொபைல் திருடு போகும்வரை கதைத்தாக வேண்டும்.

மிக்க அன்புடன்,
snmano